திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.38 திருச்சாய்க்காடு
பண் - இந்தளம்
நித்த லுந்நிய மஞ்செய்து நீர்மலர் தூவிச்
சித்த மொன்றவல் லார்க்கரு ளுஞ்சிவன் கோயில்
மத்த யானையின் கோடும்வண் பீலியும் வாரித்
தத்து நீர்ப்பொன்னி சாகர மேவுசாய்க் காடே.
1
பண்ட லைக்கொண்டு பூதங்கள் பாடநின் றாடும்
வெண்ட லைக்கருங் காடுறை வேதியன் கோயில்
கொண்ட லைத்திகழ் பேரிமு ழங்கக் குலாவித்
தண்ட லைத்தடி மாமயி லாடுசாய்க் காடே.
2
நாறு கூவிள நாகிள வெண்மதி யத்தோ
டாறு சூடும் அமரர் பிரானுறை கோயில்
ஊறு தேங்கனி மாங்கனி யோங்கிய சோலைத்
தாறு தண்கத லிப்புதல் மேவுசாய்க் காடே.
3
வரங்கள் வண்புகழ் மன்னிய எந்தை மருவார்
புரங்கள் மூன்றும் பொடிபட எய்தவன் கோயில்
இரங்க லோசையு மீட்டிய சரத் தொடுமீண்டித்
தரங்க நீள்கழித் தண்கரை வைகுசாய்க் காடே.
4
ஏழை மார்கடை தோறு மிடுபலிக் கென்று
கூழை வாளர வாட்டும் பிரானுறை கோயில்
மாழை யொண்கண் வளைக்கை நுளைச்சியர் வண்பூந்
தாழை வெண்மடல் கொய்துகொண் டாடுசாய்க் காடே.
5
துங்க வானவர் சூழ்கடல் தாங்கடை போதில்
அங்கொர் நீழ லளித்தஎம் மானுறை கோயில்
வங்கம் அங்கொளிர் இப்பியும் முத்தும் மணியுஞ்
சங்கும் வாரித் தடங்கட லுந்து சாய்க் காடே.
6
வேத நாவினர் வெண்பளிங் கின்குழைக் காதர்
ஓத நஞ்சணி கண்டர் உகந்துறை கோயில்
மாதர் வண்டுதன் காதல்வண் டாடிய புன்னைத்
தாது கண்டு பொழில்மறைந் தூடுசாய்க் காடே.
7
இருக்கு நீள்வரை பற்றி யடர்த்தன் றெடுத்த
அரக்கன் ஆகம் நெரித்தருள் செய்தவன் கோயில்
மருக் குலாவிய மல்லிகை சண்பகம் வண்பூந்
தருக் குலாவிய தண்பொழில் நீடுசாய்க் காடே.
8
மாலி னோடயன் காண்டற் கரியவர் வாய்ந்த
வேலை யார்விட முண்டவர் மேவிய கோயில்
சேலின் நேர்விழி யார்மயி லாலச் செருந்தி
காலை யேகன கம்மலர் கின்றசாய்க் காடே.
9
ஊத்தை வாய்ச்சமண் கையர்கள் சாக்கியர்க் கென்றும்
ஆத்த மாக அறிவரி தாயவன் கோயில்
வாய்த்த மாளிகை சூழ்தரு வண்புகார் மாடே
பூத்த வாவிகள் சூழ்ந்து பொலிந்தசாய்க் காடே.
10
ஏனை யோர்புகழ்ந் தேத்திய எந்தைசாய்க் காட்டை
ஞான சம்பந்தன் காழியர் கோன்நவில் பத்தும்
ஊன மின்றி உரைசெய வல்லவர் தாம்போய்
வான நாடினி தாள்வரிம் மாநிலத் தோரே.
11
jpUr;rpw;wk;gyk;

திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.41 திருச்சாய்க்காடு
பண் - சீகாமரம்
மண்புகார் வான்புகுவர் மனமிளையார் பசியாலுங்
கண்புகார் பிணியறியார் கற்றாருங் கேட்டாரும்
விண்புகா ரெனவேண்டா வெண்மாட நெடுவீதித்
தண்புகார்ச் சாய்க்காட்டெந் தலைவன்றாள் சார்ந்தாரே.
1
போய்க்காடே மறைந்துறைதல் புரிந்தானும் பூம்புகார்ச்
சாய்க்காடே பதியாக உடையானும் விடையானும்
வாய்க்காடு முதமரமே இடமாக வந்தடைந்த
பேய்க்காடல் புரிந்தானும் பெரியோர்கள் பெருமானே.
2
நீநாளும் நன்னெஞ்சே நினைகண்டாய் யாரறிவார்
சாநாளும் வாழ்நாளுஞ் சாய்க்காட்டெம் பெருமாற்கே
பூநாளுந் தலைசுமப்பப் புகழ்நாமம் செவிகேட்ப
நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே.
3
கட்டலர்த்த மலர்தூவிக் கைதொழுமின் பொன்னியன்ற
தட்டலர்த்த பூஞ்செருத்தி கோங்கமருந் தாழ்பொழில்வாய்
மொட்டலர்த்த தடந்தாழை முருகுயிர்க்குங் காவிரிப்பூம்
பட்டினத்துச் சாய்க்காட்டெம் பரமேட்டி பாதமே.
4
கோங்கன்ன குவிமுலையாள் கொழும்பணைத்தோட் கொடியிடையைப்
பாங்கென்ன வைத்துகந்தான் படர்சடைமேற் பால்மதியந்
தாங்கினான் பூம்புகார்ச் சாய்க்காட்டான் தாள்நிழற்கீழ்
ஓங்கினார் ஓங்கினா ரெனவுரைக்கும் உலகமே.
5
சாந்தாக நீறணிந்தான் சாய்க்காட்டான் காமனைமுன்
தீந்தாகம் எரிகொளுவச் செற்றுகந்தான் திருமுடிமேல்
ஓய்ந்தார மதிசூடி ஒளிதிகழும் மலைமகள்தோள்
தோய்ந்தாகம் பாகமா வுடையானும் விடையானே.
6
மங்குல்தோய் மணிமாடம் மதிதவழும் நெடுவீதி
சங்கெலாங் கரைபொருது திரைபுலம்புஞ் சாய்க்காட்டான்
கொங்குலா வரிவண்டி னிசைபாடு மலர்க்கொன்றைத்
தொங்கலான் அடியார்க்குச் சுவர்க்கங்கள் பொருளலவே.
7
தொடலரிய தொருகணையாற் புரமூன்றும் எரியுண்ணப்
படவரவத் தெழிலாரம் பூண்டான்பண் டரக்கனையுந்
தடவரையால் தடவரைத்தோ ளூன்றினான் சாய்க்காட்டை
இடவகையா லடைவோமென் றெண்ணுவார்க் கிடரிலையே.
8
வையநீ ரேற்றானும மலருறையும் நான்முகனும்
ஐயன்மார் இருவர்க்கும் அளப்பரிதால் அவன்பெருமை
தையலார் பாட்டோவாச் சாய்க்கெட்டெம் பெருமானைத்
தெய்வமாப் பேணாதார் தெளியுடைமை தேறோமே.
9
குறங்காட்டு நால்விரற் கோவணத்துக் கோலோவிப்போய்
அறங்காட்டுஞ் சமணரும் சாக்கியரும் அலர்தூற்றுந்
திறங்காட்டல் கேளாதே தெளிவுடையீர் சென்றடைமின்
புறங்காட்டில் ஆடலான் பூம்புகார்ச் சாய்க்காடே.
10
நொம்பைந்து புடைத்தொல்கு நூபுரஞ்சேர் மெல்லடியார்
அம்பந்தும் வரிக்கழலும் அரவஞ்செய் பூங்காழிச்
சம்பந்தன் தமிழ்பகர்ந்த சாய்க்காட்டுப் பத்தினையும்
எம்பந்த மெனக்கருதி ஏத்துவார்க் கிடர்கெடுமே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com